சனி, 19 செப்டம்பர், 2009

கோமாதா-இறைவனின் இருப்பிடம்


•பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்
•கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
•சிரம் - சிவபெருமான்
•நெற்றி நடுவில் - சிவசக்தி
•மூக்கு நுனியில் - குமரக் கடவுள்
•மூக்கினுள் - வித்தியாதரர்
•இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
•இரு கண்கள் - சந்திரர், சூரியர்
•பற்கள் - வாயு தேவர்
•ஒளியுள்ள நாவில் - வருண பகவான்
•ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்
•மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்
•உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்
•கழுத்தில் - இந்திரன்
•முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்
•மார்பில் - சாத்திய தேவர்கள்
•நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு
•முழந்தாள்களில் - மருத்துவர்
•குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்
•குளம்பின் நடுவில் - கந்தவர்கள்
•குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்
•முதுகில் - உருத்திரர்
•சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்
•அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்
•யோனியில் - ஏழு மாதர்கள்
•குதத்தில் - இலக்குமி தேவி
•வாயில் - சர்ப்பரசர்கள்
•வாலின் முடியில் - ஆத்திகன்
•மூத்திரத்தில் - ஆகாய கங்கை
•சாணத்தில் - யமுனை நதி
•ரோமங்களில் - மகாமுனிவர்கள்
•வயிற்றில் - பூமாதேவி
•மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்
•சடாத்களியில் - காருக பத்தியம்
•இதயத்தில் - ஆசுவனீயம்
•முகத்தில் - தட்சிணாக்கினி
•எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்
•எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.

பசு விரும்பி

சிவலோகத்திலே சிவனது சந்நிதியில் இடபம் இருக்கும். அதன் பக்கத்திலே நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, கமனை என்னும் ஐவகைப் பசுக்கள் இருக்கும். இவை முறையே, கபிலநிறமும், கருநிறமும், வெண்ணிறமும், புகைநிறமும், செந்நிறமும் உடையனவாம். இவ்வைந்தும், சிவனது திருவருளினாலே திருப்பாற்கடலில் இருந்து, சிவபூசையின் பொருட்டும், யாகாதிகமருங்களின் பொருட்டும் பூமியில் உற்பவித்தன. இப்பசுவின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருக்குமாறு கூறுதும். பிரமாவும் விட்டுணுவும் கொம்பினடியில் இருப்பர்; கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும் கொம்பின் நுனியில் இருக்கும்; சிவன் சிரத்திலும், உமாதேவி நடுநெற்றியிலும், முருகக் கடவுள் மேல் நாசியிலும், நாகேசர் உள் நாசியிலும், அச்சுவினிதேவர் இரண்டு காதுகளிலும், சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களிலும், வாயு பல்லிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி ஊங்காரத்திலும், இயமன் இருதயத்திலும், இயக்கர்கள் கெண்டைத் தலத்திலும், உதயாஸ்தமயன சந்திகள் உதட்டிலும், இந்திரன் கழுத்திலும், அருக்கர்கள் திமிலிலும், சாத்தியர் மார்பிலும், அனிலவாயு நான்கு கால்களிலும், மருத்துவர் முழந்தாள்களிலும், நாகலோகத்தார் குரத்தின் நுனியிலும், கந்தருவர் குரத்தின் நடுவிலும், தேவ மாதர்கள் மேற்குரத்திலும்; உருத்திரர் முதுகிலும், வசுக்கள் சந்திகளிலும், பிதிர்கள் அரைப்பலகையிலும், சத்தமாதர்கள் பசுத்திலும், இலக்குமி அபானத்திலும், நாகேசர் அடிவாலிலும் இருப்பர், சூரியனொளி வால் மயிரிலும், கங்கை மூத்திரத்திலும், யமுனை சாணத்திலும் இருக்கும், முனிவர்கள் உரோமத்திலும், பூமிதேவி உதரத்திலும் இருப்பர்; சமுத்திரம் முலையிலும், காருகபத்தியம் முதலிய அக்கினி மூன்றும் முறையே வயிறு இருதயம் முகம் என்னும் உறுப்புக்களிலும், யாகங்களெல்லாம் எலும்பிலும் சுக்கிலத்திலும் இருக்கும்; கற்புடைமகளிர் எல்லா அவயவங்களிலும் இருப்பர்.இத்துணைச் சிறப்பினவாகிய பசுக்களை இயக்குங்கால், சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடும் பலாசங்கோலினாலே மெல்ல ஓங்கி, போ போ என்று இயக்குக. இரக்கமின்றிக் கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்து வீழ்வர். பசுக்களின் பெருமையை உணர்ந்து, அவைகளை வலஞ்செய்து, துதித்து வணங்கி, புல்லுக்கொடுத்தோர் சிவலோகத்தை அடைந்து இன்புறுவர். பசுக்களைத்தீண்டினும், தீவினைகள் நீங்கி, நல்வினைகள் பெருகும். அவைகள் இம்மை மறுமை இரண்டிலும் பயனைத் தரும். பசுக்களுக்குச் சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண் ஓடைமண் புற்றுமண் வில்வத்தடிமண் அரசடிமண் என்பவைகளால் நிலம்படுத்து, முதிர்கன்று இளங்கன்று நோயுற்றகன்று என்னும் இவைகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைக்க, நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கி, சுத்தி செய்க. மசகம் வராமல் தூபம் இடுக, தீபங்கள் ஏற்றுக சாலை எங்கும் பூமாலை நாற்றுக. பசுக்களை, சாலையினுள்ளே சுவத்தி என்னும் சொல்லைச் சொல்லி, மெல்ல மெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லைக் கொடுக்க, நோயுற்ற பசுக்களுக்கு வேறிடம் அமைத்து, மருந்து கொடுத்துப் பேணுக. அட்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தூபதீபம் காட்டி வணங்குக. பசுக்களை வேனிற்காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச்சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய்யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உறாவண்ணம் மேய்க்க, பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், பூசை செய்யாதவர்களும், காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வர்கள். ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், சிவனுக்கும் ஆசாரியருக்கும், பசுவைத் தானம் செய்தலும், குற்றமற்ற இலக்கணங்களையுடைய இடபத்தைச் சிவசந்நிதிக்குத் தானம் செய்தலும், சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும், இளைத்த பசுவைக் கண்டி இரங்கித் தாம் வாங்கி வளர்த்தலும், பெரும் புண்ணியங்களாம். பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களையும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க. கன்று பால் உண்டு முலையை விடுத்தபோது, ஜலத்தினாலே முலையைக் கழுவிக் கறக்க. ஆசை மிகுதியினாலே கன்றுக்குப் பால்விடாமற் கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து, கடும்பசியினாலே வீடுகள் தோறும் இரப்பன். கபிலையின் பாலைச் சிவனுக்கே கொடுக்க; அதனைத் தாம் பருகில் நரகத்து வீழ்வர். மலட்டுப்பழுவின் மேலேனும் இடபத்தின் மேலேனும், பாரம் ஏற்றினோரும், இடபத்தில் ஏறினோரும் நரகத்தில் வீழ்வர். பசுக்களைப் பகைவர் கவரின், எதிர்த்து காக்க; காத்தல் அரிதாயவழித் தம்முயிர் விடுத்தோர் சிவபதம் அடைவர். இதுகாறும் கூறியவற்றிற் கெல்லாம் பிரமாணம் சிவதருமோத்தரத்துக் கோபுரவியலின் இறுதியிற் காண்க.
கோமாதா நமக்கு இன்னொரு மாதா(அம்மா)

பசுக்களுக்கு "VIP" அந்தஸ்த்து!

பசுக்களுக்கு "VIP" அந்தஸ்த்து!
நெதர்லாந்து நாட்டில் பால்பண்ணை பசுக்கள் அதிகமாக பால் கறந்தால் அந்த பசுக்களுக்கு சிறப்பு மரியாதையை கொடுக்கப்படுகிறது .அங்குள்ள வாட்ஷே பால்பண்ணையில் எண்பது பசுக்கள் உள்ளன.அதற்க்கு தினந்தோறும் மசாஜ் செய்து கொடுக்கிறார்கள்.படுப்பதற்கு ரப்பர் மெத்தை கொடுக்கிறார்கள் .

பசுக்களை சந்தோசமாக வைத்துக் கொண்டால் தான் அவைகள் அதிக அளவில் பால் தருகிறது என்று பண்ணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .சில மாடுகளுக்கு வாட்டர் பெட்டும் கொடுத்து படுக்க செய்கின்றனர் .பசுக்கள் சந்தோசமாக பால் தந்தால் அந்த பால் மிகவும் சுவையாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்

சனி, 14 பிப்ரவரி, 2009

ஆயின நாமம் - நாராயணம்

”குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலம்தரம் செயும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்”

திருமங்கையாழ்வார் கண்டு கொண்ட நாராயணா எனும் நலம் தரும் சொல்லை, கண்டுணர்ந்து அவன் அடி பணிவோம்.

திங்கள், 2 பிப்ரவரி, 2009

பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் பசு!

பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே. 3. ஐக்கிய ஸ்வரூபம் கோமாதா எல்லாமே இறை வடிவம் என்றாலும், நாம் தொன்றுதொட்டு, சிலவற்றிலேயே, சில வடிவங்களிலேயே, அனைத்து குணங்களின் ஐக்கியத்தை உணர்ந்திருக்கிறோம். அர்த்த நாரீஸ்வரரில் சிவ-சக்தி ஐக்கியத்தையும்,சங்கர நாராயணரில் சிவ-விஷ்ணு ஐக்கியத்தையும்,லக்ஷ்மி நாராயணரில் விஷ்ணு-லக்ஷ்மி ஐக்கியத்தையும்,நரசிம்மரில் மனித-மிருக ஐக்கியத்தையும், தாணுமாலயனில் ஹரி-ஹர-ப்ரும்ம ஐக்கியத்தையும்,கணபதியில் யானை-தேவர்கள் ஐக்கியத்தையும்,ஏகபாத த்ரிமூர்த்தியில் மூவரின் இணைவையும் காண்கிறோம். பலவற்றுள் ஐக்கியப்பாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் எல்லாமே சர்வ குண ஐக்கிய வடிவமே. யாவுமே நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு வகை அளவு கலவை வடிவமே. ஆணும் பெண்ணும் வித்தியாசமாக தோன்றினாலும், இரு பாலாருமே 45 'X' 'Y' க்ரோமசோம்களின் கூட்டே. இவற்றில் ('X' 'Y' - ல்)ஒன்று கூடினால் ஆண் என்றும், மற்றொன்று கூடினால் பெண் என்றும் கூறுகிறோம். ஒவ்வொரு ஜீவ அணுவின் அடிப்படை அமைப்பான DNA, ஒரு மனிதரின் பல்லாயிரக் கணக்கான மூதாதையர்களின் குணங்களை உள்ளடக்கி இருப்பது போலவும், மிகச்சிறிய ஆலம் விதை பிரும்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போலவும், ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒருமை வடிவமாகும். இங்கு ஒரு முக்கியமான செய்தியை கவனிக்க வேண்டும். இந்து மதம் பசுமாட்டைத் தவிர வேறு எந்த இனமும் தெய்வசக்தியற்றது என்று கூறவில்லை. காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங் கைகளைப் பார்த்து நுனிப்பகுதியில் மகாலக்ஷ்மியும், இடையில் சரஸ்வதியும், கணுப்பகுதியில் பார்வதியும், (முச்சக்திகளும் இருப்பதை) நினைவுபடுத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. எனினும் தோட்டத்துக் கனியை அறியாமல் இருப்பதே பொது குணம் என்பதால் நாம் நம்மை அறிவதற்கு ஏதுவாக பரம்பொருளை, முதலில் பிறவற்றில் இருப்பதை உணர, பல வழிவகைகளை இந்து மதக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இவ்வடிப்படையில் தோன்றியதே கோபூஜை (பசு வழிப்பாடு). உலகில் உள்ள கோடிக்கணக்கான கீரை, காய், கனிகளையும், தெரிந்த பின்னரே சிலவற்றை உபயோகிப்போம் என்பதில்லை. நமக்கு நன்மை அளிப்பதாக அறிந்ததை உடனே பயன்படுத்திடுகிறோம். இது போல பூச்சி முதல் பிரும்மாண்டமான இனம் வரை, ஒவ்வொன்றின் தெய்வ அம்சத்தை உணரும் வரை காத்திராமல், பசுமாடு போன்று, தெய்வாம்சம் அறியப்பட்ட இனங்களை வழிபட்டு பயன் பெறுவதே அறிவுடைமை. நன்மை அளிப்பதாக அறிந்ததை மறந்திடக் கூடாது என்றும் கிடைத்த கனியை நழுவவிடக் கூடாது என்பதற்காகவும் துவங்கப்பட்டு தொடர்வதே கோமாதா பூஜையாகும். எல்லோரும் தத்தம் வீட்டிலேயே, பசு வழிபாடு செய்ய இயலாதிருக்கலாம் என்றே ஒவ்வொரு ஆலயத்திலும், பசுத்தொழுவம் அமைத்து, அன்றாடமும், கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆலயத்திலும் "கோ சாலை" (பசு மடம்) இருந்தால் அருகில்வாழ் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும். தினமும் பசுமடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை. அதோடு, முக்கிய நாட்களில் அல்லது பல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம். ஆலயத்திற்கு மட்டுமின்றி, அருகுள்ள மக்களுக்கு மட்டுமின்றி அகிலத்திற்கே அனைத்து நன்மையும் அளிக்கும். கோபூஜை செய்வோம் கஷ்டங்கள் தீரப்பெருவோம்.பசுவை வழிபடுவோம் பரம்பொருளை அறிந்திடுவோம்.

திங்கள், 13 அக்டோபர், 2008

பசுநெய்-"பாவேந்தர்" பாரதிதாசன்.

செந்நெல் மாற்றிய சோறும்
பசுநெய்தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, -
கட்டித்தயிரோடு மிளகின் சாறும்,
நன்மது ரஞ்செய் கிழங்கு -
காணில்நாவிலி னித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா!
உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!!

"பாவேந்தர் பாரதிதாசான்"

வெள்ளி, 12 செப்டம்பர், 2008

பசுமாட்டின் தவப்பயன்

மனிதப்பிறவியைப் போலவே பசுமாட்டின் பிறவியும் மிகப்பெரும் தவப்பயனால்தான் கிடைக்கிறது,
காவோ வை ஸர்வா தேவதா: என்பதாக பசுவின் உடலில் வால் நுனியிலிருந்து கால் குளம்பிலிருந்து கொம்பின் நுனிப்பகுதி வரை ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு தெய்வம் வாஸம் செய்வதாக நமது சாஸ்திரம் தெரிவிக்கிறது,
கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபமஸ்து நித்யம் பசுவுக்கும் வேதம் கற்ற அந்தணர்களுக்கும் எப்போதும் மங்களம் உண்டாகட்டும் என்று ப்ரார்த்தனை செய்கிறோம்,
கோ ப்ராஹ்மண ஹிதர் (பசுவுக்கு நன்மையைச் செய்பவர்) என்றும் கோபாலர் கோவிந்தர் (பசுவை பாதுகாப்பவர்), என்றும் ஸ்ரீ கிருஷ்ணரை அழைக்கிறோம்.
ஸ்ரீ கிருஷ்ணர் பாலலீலை செய்த இடம் கோகுலம் என்று அழைக்கப்படுகிறது,
பசுவை பராமரிக்கும் (யாதவ) குலத்தில்தான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார்.
கோ வை பராமரிக்கும் குலத்தில் பிறந்த கோபிகளே ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆனார்கள்.
பசுமாடு நமக்கு பால் (தயிர் நெய்) தந்து உதவுகிறது, பசுவின் சாணமும் மூத்திரமும் அனைத்தையும் சுத்திசெய்யும் தன்மை வாய்ந்தது, ஆகவேதான் பசுவின் பால் தயிர் கோமயம் கோமூத்திரம் நெய் ஆகியவற்றைக்கொண்டு பஞ்ச கவ்யம் என தயார் செய்கிறோம், பஞ்சகவ்யமானது அதைச் சாப்பிடுபவரின் உடல் தோல், மாம்ஸம், ரத்தம், மற்றும் எலும்புப் பகுதி வரை உள்ள பாபங்களை (அக்னி விறகுக் கட்டையை எரிப்பது போல்) எரித்து விடுகிறது என்கிறது சாஸ்திரம்.
கோமூத்திரத்தை சிறிது தலையில் தெளித்துக் கொள்வதே கங்கா ஸ்நானம் செய்த பலன்,
பசுவை ஒரு முறை ப்ரதக்ஷிணம் செய்வதால் பூ (உலகம் முழுவதும்) பிரதக்ஷிணம் செய்த புண்யம்,
பசுவை பூஜித்தால் ப்ருஹ்மா விஷ்ணு ருத்ரர் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்யம்,
கோக்ராஸம் (பசுவிற்கு புல் கொடுத்தல்), கோகண்டூயனம் (பசுவிற்கு கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தல்) மஹா பாபத்தையும் போக்கடிக்கும்,
பசுக்கள் மேய்ந்துவிட்டு வீடு திரும்பும் ஸந்த்யாகாலம் மிக பவித்ரமான கோதூளி காலம் (லக்னம்) எனப்படுகிறது,
பசு நடக்கும் போது எழும் புழுதி மேலே படுவது எட்டுவகை ஸ்னானங்களில் ஒன்றாகும்,
மா என்று கத்தும் பசுமாட்டின் சப்தம் அந்தப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது என்கிறது வேதம்,
கவாம் கோஷ்டே தகுணம் என்பதாக பசுமாட்டின் அருகில் பசுவஸிக்குமிடத்தில் அமர்ந்து செய்யும் மந்திரஜபம் மற்றும் தர்ம கார்யங்களுக்கு நூறு பங்கு பலன் .
மனிதனின் கண்களுக்குப் புலப்படாத ம்ருத்யு , யமன், யம தூதர்கள், பசு மாட்டின் கண்களுக்கு மட்டும் தெரிவார்கள், ஆகவே தான் ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது,
பர (யம) லோகத்துக்கு (யம) தூதர்களால் அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வெந்நீர் ஓடும் வைதரணீ என்னும் நதியைத் தாண்ட முடியாமல் தவிக்கும் போது (தானம் செய்யப்படும்) பசுமாடு வந்து உதவுகிறது, அதன் வாலைப்பிடித்துக் கொண்டு ஜீவன் வைதரணீ நதியைக் கடக்கிறான் என்கிறது கருட புராணம்,
இன்னும் ஒரு சில ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு (நாகரீக வளர்ச்சியால்) ஏற்படும் சில இயற்கை மாறுதலால் உலகம் முழுவதும் சில விபரீதங்கள் ஏற்படும்போது பசுக்கள் இருக்குமிடம் மட்டும் எந்த ஒரு பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என்று ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் வெளியிட்டுள்ள ஓர்ஆராய்ச்சிக் கட்டுரை தெரிவிக்கிறது,
ஆகவேதான் பசுக்களின் பெருமைகளை நன்கு புரிந்து கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் பசுமாட்டை வளர்த்து பாதுகாத்து வந்தார்கள், தற்சமயமும் பலர் ஆங்காங்கே கோசாலைகள் நிறுவி மொத்தமாக பசுவைப் பாதுகாக்கிறார்கள், முறையாக பராமரிக்கவும் செய்கிறார்கள்,.
ஆனால் வேறு சிலர் பசுவின் பெருமையை மஹிமையை அறியாமல் (கறவையற்ற)பசுக்களை வெளி மாநிலத்துக்குக் கொண்டு சென்று துன்புறுத்துகிறார்கள் வதைக்கவும் செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம், இது மிகவும் வருந்தத்தக்கது,
கோஹத்தி மிகப்பெரும் மஹாபாபம், அதைச்செய்வபருக்கு தனியான நரகம் உண்டு, பசுவின் பெருமைகளை உணர்த்தி, பசு துன்புறுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,
தற்சமயம் ஒரு சிலர் பசுவை (துன்புறுத்த) அழைத்துச்செல்வதை தடுத்து நிறுத்தி ஓரிடத்தில் வைத்து (ப்ரதி ப்ரயோஜனம் எதிர்பாராமல்) பாதுகாத்து வருகிறார்கள், பசுவை பாதுகாப்பது மிகப்பெரும் புண்யம், தர்மம், அது குடும்பத்தையே தேசத்தையே பாதுகாக்கும், இவர்களுக்கு ஆதரவு தந்து உதவ வேண்டும்,
பசுக்கள் பாதுகாக்கப்படும் கோசாலைகளுக்குசென்று பசுக்களை பூஜை செய்து ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் செய்வதுடன், பசு இருக்குமிடத்தை சுத்தப்படுத்துதல் பசுவுக்கு சொறிந்து தந்து புல்தந்து சுச்ரூஷையும் செய்யலாம்,
பசுவிற்கு பணிவிடை செய்ததால்தான் வெகு நாட்களாக குழந்தை இல்லாதிருந்த திலீபன் ஸுதக்ஷிணை தம்பதிகளுக்கு நல்ல புத்ரன் பிறந்தான் என்கிறார் காளிதாஸர்,
எங்கு பசுக்கள் பக்தியுடன் பராமரிக்கப்படுகிறதோ அங்கு மஹாலக்ஷ்மி உள்பட அனைத்து தேவதைகளும் ஸான்னித்யமாக இருப்பார்கள், மங்களமும் ஆரோக்யமும் ஏற்படும்,
ஆகவே ஆங்காங்கே பால் (கறவை) நின்ற வயதான பசுக்கள் துன்புறுத்துவது நிறுத்தப்பட்டு, பசுக்களின் மஹிமைகளை தெரிந்து கொண்டு பசுவை கோமாதாவை பாதுகாத்து பூஜித்து தேசத்துக்கும் மனித ஸமூகத்துக்கும் நன்மையைச் செய்ய ஸ்ரீ பகவான் அனுகிரஹிக்கட்டும்.